புதன், 2 மே, 2012

கலாச்சாரம் என்றால் என்ன?

Mohammed Zubair kaniyuri@gmail.com


எங்களின் இறைவனே! வானங்களும் பூமியும் நீ நாடிய எல்லாப் பொருட்களும்
நிரம்ப எல்லாப் புகழும் உனக்கே உரித்தாகட்டுமாக!
ஸலவாத்தும் ஸலாமும் உனது இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மீது நிலவட்டுமாக!
அண்ணலாரின் மூலம் முஃமின்களுக்கு நீ பெரும் உதவி புரிந்துள்ளாய். அவர்
அவர்களில் ஒருவர். அவர்களுக்கான தூதர். உனது வசனங்களை ஓதிக் காண்பித்து
அவர்களைப் பரிசுத்தப் படுத்தியவர். வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்
கொடுத்தவர். அதற்கு முன்பு அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருந்தவர்களே.

யா அல்லாஹ்! அன்னாரின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் பொருந்திக்
கொள்வாயாக. அவர்கள் (உனது இறுதித் தூதரான) அவரை ஈமான் கொண்டவர்கள்.
அவருக்கு பக்க பலமாக இருந்து உதவி செய்தவர்கள். அவருக்கு அருளப்பட்ட
பிரகாசமான வேதத்தை பின்பற்றியவர்கள். நிச்சயமாக அவர்கள் வெற்றியாளர்களே.

இஸ்லாமிய எழுச்சி ஏற்பட்ட காலம் முதல் இன்றைய நாள் வரை கலாச்சாரம்
தொடர்பான பல கேள்விகள் மக்களின் கவனங்களை திருப்பி வருகின்றன. அவற்றால்
விவாதங்களும் பரவிய வண்ணம் உள்ளன. கலாச்சாரத்தைச் சுற்றி உருவாகி வரும்
கேள்விகள்

· கலாச்சாரம் என்றால் என்ன?

· கலாச்சாரம் என்பது அறிவுத் துறையுடன் மட்டும் சம்மந்தப்பட்டதா அல்லது
அதையும் தாண்டி வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் அது கவனிக்கப்படுமா?
அதன் உண்மை நிலை என்ன?

· கலாச்சாரம் – நாகரீகம் இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உண்டா அல்லது
இரண்டும் ஒன்றுதானா?

· உலக கலாச்சாரம் என்று ஒன்று உண்டா? ஒவ்வொரு சமுதாயத்திற்கும்
அதற்கென்று தனிக்கலாச்சாரம் உண்டு என்று சொல்லி விடுவதா?

· நமது கலாச்சாரத்தை அரபிய கலாச்சாரம் என்பதா அல்லது இஸ்லாமிய கலாச்சாரம்
என்பதா அல்லது இரண்டும் இணைந்த கலாச்சாரம் என்பதா?

· இஸ்லாமிய காலாச்சாரம் என்பது மதம் சார்ந்த கலாச்சாரமா அல்லது அதையும்
தாண்டி பரந்து விரிந்த பொருளைக் கொண்டதா?

· நமது இஸ்லாமிய கலாச்சாரத்தின் தனித்துவங்கள் யாவை?

· நமது இஸ்லாமிய கலாச்சாரம் எதனையும் உள்ளே அனுமதிக்காத இறுக்கமான
கலாச்சாரமா? (சிலரின் யூகமும் இதுவே. மனோ இச்சையின் வழியில் நடந்திடும்
சிலர் இப்படி நடப்பதோடு அதனை பரப்பவும் செய்கிறார்கள்.) அல்லது எல்லாக்
கலாச்சாரங்களையும் உள்ளே அனுமதிக்கும் கட்டுப்பாடற்ற கலாச்சாரமா?

· பிற கலாச்சாரம் போன்றவற்றை உள்ளே அனுமதிக்கும் பொழுது அவற்றில் ஏற்கத்
தக்கவைகள் ஏற்கத் தகாதவைகள் என்ற வரையறை ஏதும் உண்டா இல்லையா?

· ஏற்கக் கூடாது என்றால் ‘எச்சரிக்கப்பட்டவைகள்’ என எவற்றைக் கூறுவது? அவைகள் யாவை?
ஆக மொத்தம் பத்துக் கேள்விகள் கலாச்சாரம் தொடர்பாக மக்களைக் சுற்றி
வருகின்றன. இங்கே தரப்படும் விளக்கங்கள் அவற்றுக்கு விளக்கங்களாக
அமையும், இன்ஷா அல்லாஹ்…!

பொதுவாக பிற கலாச்சார விசயங்களில் அவற்றின் முழு வடிவத்தையும் தொடாமல்
முஸ்லிம் சமூகத்தின் சூழ்நிலை மற்றும் இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில்
எடுக்கவேண்டியவற்றை எடுத்துக் கொள்வது ஆகுமானதே என்றாலும் அப்போது மூன்று
வகையான விசயத்தில் எச்சரிக்கைகள் தேவை.

· பயன்படுத்த இயலாத முதிர்ச்சியற்ற கலாச்சாரம்.

· அலட்சியமாக எடுக்கப்பட்டவை

· இஸ்லாமிய கலாச்சாரத்தை அழிக்கும் அளவுக்கு பிற கலாச்சாரம் புகுத்தப்பட்டவை.

ஆக இம்மூன்றும் எச்சரிக்கப்பட்ட வகைகளைச் சார்ந்தவை. பிற
கலாச்சாரங்களுக்கு அனுமதி தரும்போது இம்மூன்று வகையான கலாச்சாரம்
குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இங்கு கூறப்படும் விசயங்கள்
திருக்குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிகளாரின் சுன்னாவும்தான் இதன் அடிப்படை
ஆதாரங்கள்.

என்றாலும் பாவிகளின் பாதைகளை விட்டும் விலகி முஃமின்களின் வழியை
பின்பற்றிட வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் மூத்த தலைவர்களான இஸ்லாமிய
பேரரறிஞர்களின் கூற்றுகளும் அவர்களின் பாரம்பரிய செயல்பாடுகளும்
தொடர்ந்து கூறப்பட்டுள்ளன.

இதன் முடிவில் (பிற கலாச்சாரங்களை எவற்றில் அனுமதிக்கலாம் எவற்றில்
அனுமதிக்கலாகாது எனும் புதிய களமான) இந்தத் துறையில் முன்மாதிரி
அறிஞர்களாக இஸ்லாமிய வரலாற்றில் ஜொலித்த இரண்டு இஸ்லாமிய அறிஞர்களின்
ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் இடம் பெற்றுள்ளன. அவ்விருவரில் ஒருவர் கீழை
இஸ்லாமிய நாடுகளில் தோன்றிய இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் (கி.பி. 1058 –
1111) மற்றொருவர் மேலை இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான அன்றைய அல்
அந்தலூஸிய்யா (ஸ்பெயின்) இஸ்லாமியப் பேரரசைச் சார்ந்த இமாம் இப்னு ருஷ்து
(ரஹ்) அவர்கள் (கி.பி. 1126 – 1198).

தற்காலத்தில் நவீன உலக படிப்புகள் அனைத்திற்கும் மேற்குலகம் பிறப்பிடமாக
இருப்பது போன்று இவ்விரு அறிஞர்களும் வாழ்ந்த காலத்தில் அறிவுத் துறையில்
முன்னணிப் படிப்புகளாக விளங்கிய தத்துவவியல் மற்றும் மருத்துவத்தில்
கிரேக்கம் முன்னணியில் இருந்தது. ஆகவே அறிவுத் துறை சார்ந்த
இப்படிப்புகளின் வழியாக கிரேக்க கலாச்சாரம் இஸ்லாமிய உலகிலும் புகுந்தது.
தற்கால விஞ்ஞான உலகம் டார்வினின் ‘பரிணாம வளர்ச்சியில் உயிர்கள்
உருவாகின’ எனும் நாத்திக கொள்கையை மையமாகக் கொண்டு சுழல்வதைப் போன்று
கிரேக்கம் இவ்வுலகிற்கு தந்த படிப்புகளும் நாத்திகத்தை மையமாக கொண்டவையே.

ஆதலால் அவற்றைப் படித்த காலத்தில் முஸ்லிம் உலகம் நாத்திகத்தில் சிக்கித்
தவித்தபோது இவ்விரு அறிஞர்களும் அப்படிப்புகளிலிருந்து நாத்திகக்
கருத்துக்களை அப்புறப்படுத்தி அவற்றுக்கு இஸ்லாமிய வடிவம் தந்தனர்.
அத்துடன் கிரேக்க கலாச்சாரத்தில் இருந்து எவற்றை ஏற்றுக் கொள்ளலாம்
எவற்றை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு வரைமுறைகளையும்
ஏற்படுத்தினார்கள்.

தற்கால உலகில் முஸ்லிம்கள் நவீன படிப்புகளின் மீது ஆர்வம் செலுத்தி
வருகின்றார்கள். ஆனால் வேதனைக்குரிய விசயம் என்னவெனில் நவீன
விஞ்ஞானத்தையும் ‘நாத்திகமே’ ஆக்கிரமித்துள்ளது. எனவே நவீன கல்வியில்
நாத்திகக் கருத்துக்களும் மேற்கத்திய கலாச்சாரமும் தவிர்க்க முடியாத
ஒன்றாகி விட்டன.

எனவே முஸ்லிம்கள் நவீன கல்வியை வடிகட்டியே படிக்க வேண்டும். அப்பொழுதான்
அல்லாஹ் தந்த அளப்பெரும் அருளான ஈமானை பாதுகாக்க முடியும். அதற்கு
மேற்கண்ட இரு அறிஞர்களின் செயல்பாடுகள் துணை புரியும் என்பதால்
அவ்விருவர் குறித்து இந்நூலின் கடைசியில் கூறியுள்ளேன்.  நான் முன்னரே
எழுதி வெளியிட்ட நவீனத்துக்கும் தொன்மைக்கும் இடையிலான இஸ்லாமிய அரபிய
கலாச்சாரம் எனும் தொகுப்பின் முழு வடிவமே இந்நூல். இதை நூல் என்பதைவிட
பாடம் என்றே சொல்லலாம்.
இந்நூலில் கூறப்படும் இஸ்லாம் இது கூடாது அது கூடாது என்று ஒரேயடியாக
மறுத்துக் கொண்டிருக்கும் இஸ்லாம் அல்ல. அவ்வாறே எதனையும் சீர்தூக்கிப்
பார்க்காததால் நவீன உலகுக்கு ஏற்றபடி நடக்காததால் இறுக்கமானவர்கள் என்று
முத்திரை குத்தப்பட்டவர்கள் என்று பெயரெடுத்து விட்டவர்களும் கூறிடும்
இஸ்லாமும் அல்ல. மாறாக இஸ்லாமிய சிந்தனையாளர் லெபனான் அறிஞர் அமீர் ஷகீப்
அர்ஸலான் (ரஹ்) 1869 – 1946) அவர்கள் கூறுவது போன்று நாம் இங்கே கூறும்
இஸ்லாம் திருக்குர்ஆன் வழிகாட்டிய நபி (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த
இஸ்லாம்; சங்கைமிகு ஸஹாபாக்கள் பின்பற்றிய இஸ்லாம். ஆக மொத்தத்தில் இது
நடுநிலையான இஸ்லாம்.

எனவே இது கலந்துரையாடல்களை வரவேற்கும். புதியவைகளை ஏற்றுக் கொள்ளும்.
உள்ளத்துக்கும் அறிவிற்கும் ஒளியூட்டும். அத்துடன் தனி மனிதன் சமுதாயம்
இரண்டுக்கும் இவ்வுலக மறுவுலக நன்மைகளை சேர்த்துத் தருவதோடு இரண்டிலும்
வெற்றியையும் தரும் அல்லாஹ் நிறைவானவன்.

“(நபியே) நீங்கள் கூறுங்கள் நிச்சயமாக எனது தொழுகையும் மற்ற வணக்கங்களும்
என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே
உரித்தானவை. அவனுக்கு யாதொரும் இணையும் இல்லை. ஆகவே வழிப்பட்டவர்களில்
நான் முதன்மையானவன் என்று கூறுங்கள்” (அல்குர்ஆன் 6:162, 163)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக