வியாழன், 3 மே, 2012

சாக்ரடீஸ் பற்றிய தகவல் !!!

மனித வாழ்க்கையை செம்மைப்படுத்துவதிலும், மனித நாகரிகத்தை வழிமொழிவதிலும் தத்துவஞானிகளின் பங்கு அளப்பறியது. வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில் பல தத்துவஞானிகள் உதித்திருக்கின்றனர். உலகின் சிந்தனையை பல்வேறு வழிகளில் செம்மைப்படுத்தியிருக்கின்றனர். அவர்களுள் தலையாயவர் தத்துவஞானிகளின் தந்தை என்று போற்றப்படுபவரும், கிரேக்கத்தின் புகழை உலகெல்லாம் பரவச்செய்தவருமான சாக்ரடீஸ். ஒரு சாதாரண குடும்பத்தில் கி.மு.469 ஆம் ஆண்டு பிறந்தார் சாக்ரடீஸ். ஏழ்மையில்தான் பிறந்தார் வறுமையில்தான் வாழ்ந்தார். இளவயதில் ராணுவ வீரராக இருந்து ஏதென்ஸுக்காக பல போர்களில் பங்கெடுத்தார்.

சாக்ரடீஸ் வாழ்க்கையைப்பற்றி அதிகமாக சிந்தித்தார், எதையுமே வித்தியாசமாகவும் சிந்தித்தார் அவரது சிந்தனைகள் அந்த காலகட்டத்தில் உண்மை என நம்பப்பட்டவைகளின் அஸ்திவாரங்களையே ஆட்டம் காணச்செய்தன. வாழ்வின் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற அதீத தாகம் சாக்ரடீஸுக்கு இருந்தது. தான் அறிந்த உண்மைகளை மக்களுக்கு சொல்ல அவர் கையாண்ட உத்தியே அலாதியானது அற்புதமானது. அவர் கிரேக்கத்தின் பகல்பொழுதில் கையில் விளக்கேத்திக்கொண்டு கூட்டமுள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவதுபோல் நடிப்பார். வேடிக்கை பார்க்க அங்கு கூட்டம் கூடும். என்ன தேடுகிறீர்கள் என்று எவராவது கேட்கும்போது மனிதர்களைத் தேடுகிறேன் என்று பதில் கூறுவார். மக்கள் புரியாது விழிக்கும்போது அவர்களிடம் விளக்கிப்பேசி தன் கருத்துக்களை அவர்களது மனங்களில் விதைப்பார்.


சாக்ரடீஸ் வாழ்ந்த காலகட்டம் கிறிஸ்துவம், இஸ்லாம், பெளத்தம், சமணம், சீக்கியம், போன்ற மதங்கள் தோன்றாத காலம். அபோது ஏதென்ஸ் மக்கள் நிலவையும், சூரியனையும், இதிகாச நாயகர்களையும் கடவுளாக வழிபட்டு வந்தனர். அதனை எதிர்த்து துணிந்து கேள்வி கேட்டார் சாக்ரடீஸ். துணிந்து கேள்வி கேட்டவர்களை எள்ளி நகையாடுவதும், அவர்கள் பணிந்து போக வேண்டும் என்று துன்புறுத்தி வற்புறுத்துவதும்தான் வரலாறு முழுவதும் காணப்படும் உண்மை. கேள்வி கேட்க கேட்க சாக்ரடீஸின் எதிரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போனது. சாக்ரடீஸின் அறிவுப்பூர்வ பேச்சால் புரட்சி வெடிக்கலாம் என அஞ்சினர் ஆட்சியாளர்கள். சமுதாயத்தை சீர்திருத்த நினைத்தவர் மீது கிரேக்க இளையர்களிடம் தவறான கருத்துக்களை பரப்புகிறார் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. குற்றச்சாட்டுகளை ஆணித்தரமாகவும் அறிவுப்பூர்வமாகவும் மறுத்தாலும் தனது 70 ஆவது வயதில் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டார் சாக்ரடீஸ்.

என்னை நீதிமன்றத்தின்முன் நிறுத்திய என் எதிரிகளை நான் குறுக்குவிசாரணை செய்யவிரும்பவில்லை. என்னுடைய உண்மையான எதிரிகள் அநீதியும், அறிவின்மையும்தான். நான் கல்லையும், மண்ணையும் கடவுள் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். நான் கல்லுக்கும் மண்ணுக்குமல்ல ஒரு பெண்ணுக்குதான் பிறந்தேன். கடவுளைப்பற்றி ஆராய்ட்சி செய்வது நாத்திகம் என்றால் கடவுளை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம். நீங்கள் என்னை மன்னித்து வெளியே அனுப்பினாலும் என் உயிருள்ளவரை தர்க்கவாதத்தைத் தொடர்வேன். உண்மையில் எனக்கு அறிவில்லை மற்றவர்களுக்கும் இல்லை. மற்றவர்கள் அதை உணரவில்லை நான் எனது அறிவீனத்தை உணர்ந்தேன் அவ்வளவுதான் வேற்றுமை. நான் மரணத்திற்கு அஞ்சவில்லை. அநீதிக்குதான் அஞ்சுகிறேன் எனக்கும் உங்களுக்கும் பொதுவான கடவுள் பெயரால் நீதி கேட்கிறேன். இவ்வாறு நீதிமன்றத்தில் பேசினார் சாக்ரடீஸ்.

சாக்ரடீஸுக்கு மரணமா, மன்னிப்பா என்று முடிவு செய்ய 501 நபர்கள் கொண்ட நீதிக்குழு வாக்களித்தனர் அதில் 220 பேர் மன்னிப்புக்கும் மீதி 281 பேர்கள் மரணத்திற்கும் வாக்களித்தனர். மரண தண்டனை உறுதியானது. ஆனால் அப்போதுகூட கலங்கவில்லை சாக்ரடீஸ் ஏனெனில் மரணத்தைப்பற்றி அவரே ஒருமுறை இவ்வாறு கூறியிருந்தார் “மரணத்தைப் பற்றி கவலைப்படாதே நீ இருக்கும்வரை மரணம் வரப்போவதில்லை அது என்னவென்று உனக்கு தெரியாது அது வந்தபோது நீயே இருக்கப்போவதில்லை பிறகு ஏன் கவலை” . சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முடிவு செய்யப்பட்டது. அப்போது ஏதென்ஸில் விழாக்காலமாக இருந்ததால் அவரது மரணம் மூன்று வாரங்களுக்கு தள்ளிப்போடப்பட்டது. கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு சாக்ரடீஸ் சிறையில் அடைக்கப்பட்டார்.

சாக்ரடீஸை எப்படியாவது விடுவித்துவிட வேண்டுமென்று என்று துணிந்த சாக்ரடீஸ் நண்பரும், மாணவருமான கிரீட்டோ சிறைக்குள் புகுந்தார் தப்பி ஓடிவிடலாம் என சாக்ரடீஸை கெஞ்சினார். அதற்கு சாக்ரடீஸ் “என்னருமை கிரீட்டோ நான் நீதியை நேசித்தவன் நேர்மையானவன் என்ற நற்பெயரோடு இறந்துவிடுகிறேன் எவரும் கவலைப்பட வேண்டாம் என் உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற குழப்பமும் வேண்டாம் இறந்தபிறகு உடலில் நான் ஏது அது வெறும் உணர்வற்ற சடலம்தான் அதை எப்படி செய்தால் என்ன” கி.மு.399 ஆம் ஆண்டு சாக்ரடீஸின் மரணம் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது ஒரு விஷக்கோப்பையை சாக்ரடீஸுக்கு கொடுத்த சிறை அதிகாரி அறிவுத் தெளிவுடன் இருக்கும் தங்களுக்கு விஷம் கொடுக்க வேண்டும் என்ற நினைப்பே என்னை வருத்துகிறது என்று கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு அழுதார். புன்னகையுடன் விஷக்கோப்பையைப் பெற்று மறுமொழி சொல்லாமல் விஷத்தை அருந்தி உயிர் துறந்தார் சாக்ரடீஸ்.


வாழ்நாள் முழுவதும் கேள்வி கேட்ட சாக்ரடீஸ் தனது மரணத்தைப்பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. சாக்ரடீஸின் இறுதி ஊர்வலத்தில் பேசிய அவரது மாணவரும் கிரேக்கம் தந்த இன்னொரு தத்துவ மேதையுமான பிளேட்டோ இவ்வாறு கூறினார் ஏதென்ஸ் நகர நண்பர்களே ஒரு நல்லவரை மாபெரும் அறிஞரை வீண்பழி சுமத்தி கொன்றுவிட்ட குறை மதிப்படைந்த நாடு என்ற தீராத பழிச்சொல்லை ஏதென்ஸ் சுமக்கப் போகிறது. சாக்ரடீஸின் உயிர் பிரிந்த சில நாட்களிலிலேயே தனது தவறை உணர்ந்தது ஏதென்ஸ். சாக்ரடீஸின்மீது பழி சுமத்தியவர்களில் சிலர் பிறகு குற்ற உணர்வால் தூக்கிலிட்டு கொன்றதாக வரலாறு கூறுகிறது.

“உன்னையே நீ அறிவாய்” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற வாசகம். எதையும் அப்படியே நம்பிவிடாதே ஏன்? எதற்கு? என்று கேள்வி கேள் என்ற சிந்தனைதான் சாக்ரடீஸ் இந்த உலகிற்கு விட்டுச்சென்ற மாபெரும் சொத்து. “ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை” கவிஞர் வாலியின் இந்த பாடல் வரிகளை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்து காட்டியவர் சாக்ரடீஸ். ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் அந்த பாடல்வரி இடம்பெற்றிருந்தது. சளைக்காமல் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டதால் சாக்ரடீஸை ஆயிரத்தில் அல்ல ஆயிரம் கோடியில் ஒருவராக இன்று மதிக்கிறது உலகம்.

நம் முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக நாமும் எல்லாவற்றையும் அப்படியே பின்பற்ற வேண்டுமா? என்ற கேள்வியை நாம் கேட்டுக்கொள்ளலாம். நமது வாழ்க்கையை முடக்கும் சில மூட நம்பிக்கையை களையெடுக்கலாம். ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்டால் சாக்ரடீஸைப்போல நமக்கும் தெளிவு பிறக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக