புதன், 2 மே, 2012

அதிகரித்துவரும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை!

mohammed zubair



[ பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன.
நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன.
பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.

பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது.
பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.
கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.
இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.]
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள்.
• திண்டிவனம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கால் ஊனமுற்ற பழனி, சத்யா தம்பதியினரின் மூன்று வயதுகூட நிரம்பாத மகள் லாவண்யா. மாலை நேரத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த லாவண்யாவை தாயார் அழைக்க பதிலில்லை. மின் தடையால் எங்கும் இருட்டு. பதட்டத்தில் தேடியபோது அருகாமைப் புதரில் பிறப்புறுப்பில் இரத்தம் வடியக் கிடந்த மகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைகின்றனர். போலீசு விசாரணையில் எதிர் வீட்டில் உள்ள பாண்டியன் எனும் 25 வயது இளைஞன் மனைவியைப் பிரிந்து வாழ்பவன் அந்தப் பிஞ்சுக் குழந்தையை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியது தெரியவந்தது.
• தூக்கத்தில் திடீர் திடீரென்று விழித்துக்கொள்ளும் ஆறு வயதான நதியா வழக்கத்துக்கு மாறாக இரவில் சிறுநீர் கழிக்கத் தொடங்கினாள். அவளைக் குளிப்பாட்டும் போதுதான் பிறப்புறுப்பில் நகக்கீறல்கள் இருப்பதைக் கவனித்தாள் அவளது தாய். குழந்தையிடம் பேச்சுக்கொடுக்கும் போதுதான் எதிர் வீட்டிலிருக்கும் இளைஞன் சாக்லெட் கொடுத்து தன்னை ஏதோ செய்ததாகக் குழந்தை சொல்லித் தெரிய வந்தது.
• போலியோவால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுச் சிறுமியின் முகம் திடீரென்று வீங்கி உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த டாக்டர் அச்சிறுமியிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தபோது பக்கத்து வீட்டு இளைஞன் அச்சிறுமியைத் தவறாகப் பயன்படுத்தி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது.
• தெருவில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது ரம்யாவை பலவந்தமாகத் தூக்கிச் சென்ற எதிர்வீட்டின் 45 வயதான சீனிவாசன் பலாத்காரம் செய்யும்போது கையும் களவுமாகப் பிடிபட்டான்.
• கேக் தயாரிக்கும் பேக்கரி ஒன்றில் பயிற்சிக்காக வந்த கேட்டரிங் படிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர், அங்கு விளையாட வரும் ஐந்து வயதுச் சிறுமியை தங்களது இச்சைக்குப் பல நாட்களாகப் பயன்படுத்திய விவரம் தெரியவந்தபோது அதிர்ச்சியில் உறைந்தது அச்சிறுமியின் குடும்பம்.
• சென்னை மெட்ரிகுலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஒன்பது வயது மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கழிப்பறையில் வைத்து ஓராண்டாகப் பாலியல் வன்முறை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அதே ஆசிரியரால் குதறப்பட்ட வேறு இரண்டு மாணவிகளும் புகார் கொடுத்தனர்.
• நாகையில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை 45 வயது ஆசிரியர் ஆய்வகத்தில் வைத்து பாலியல் வன்முறை செய்ததில் அம்மாணவி கருத்தரித்தாள்.
• மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகளை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்முறை செய்தது பொதுமக்களின் போராட்டத்திற்கு பின் தெரியவந்தது. இதற்குத் தண்டனையாக அவ்வாசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
• ஈரோடு ஆரம்பப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஏழு வயது மாணவியைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. கோவை பள்ளியில் இதே போன்று வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஒருத்தி தற்கொலை செய்து கொண்டாள்.
முதல் சம்பவம் சென்ற மாதத்தில் நடந்தது. பின்னையவை சமீப காலங்களில் நடந்து பத்திரிக்கைகளில் வெளிவந்தவை. சிறார்களைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கும் இத்தகைய சம்பவங்கள் எங்கோ மேலை நாடுகளில் மட்டும் நடக்கும் வக்கிரம் என்று எண்ணிக் கொண்டிருப்பவர்களின் மதிப்பீட்டை இவை மறுதலிக்கின்றன. பல்வேறு ஆய்வுகளும் புள்ளி விவரங்களும் இதையே வழிமொழிகின்றன.
பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் உலகத் தொகையில் 19% பேர் இந்தியாவில் இருக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் இவர்கள் மூன்றிலொரு பங்கு இருக்கின்றனர். 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. பதின்மூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53% குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9% குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இதில் இருபாலரும் ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றார்கள். விலைமாதர்களில் 15% பேர் பதினைந்து வயதுக்குட்பட்டவராவர். 2006இல் துளிர் எனும் அமைப்பு 2211 சென்னைக் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததில் 42% பேர் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லியில் சாக்ஷி எனும் தொண்டு நிறுவனம் செய்த ஆய்வில் 350 குழந்தைகளில் 63% பேர் குடும்ப உறுப்பினர்களால் பாலியல் வன்முறைக்குப் பலியானது தெரிய வந்தது.
இறைந்து கிடக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை என்பது தவிர்க்க முடியாத அங்கமாகியிருப்பதை ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றன. குடும்ப அமைப்பு சிதைந்துவரும் மேலைநாடுகள் போலல்லாமல் இந்தியப் பண்பாட்டிற்கு அச்சாணியாகக் குடும்பங்கள் வலுவாக இருப்பதாக நம்பும் பழமைவிரும்பிகள் கூட இந்த உண்மையை அங்கீகரித்துதான் ஆக வேண்டும்.
செல்பேசிகளும், இருசக்கர வாகனங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே நாம் காணும் மாற்றங்கள் அல்ல. பண்பாடும் கூட மாறித்தான் வருகின்றது. பொருளாதாரத்தில் நாட்டின் முன்னேற்றமும், விவசாயிகளின் தற்கொலையும் ஒருங்கே நிகழ்வது போல பண்பாட்டில், குறிப்பாக பாலுறவில் காதலும் கலவியும் எதிரெதிர்த் துருவங்களாக மாறி வருகின்றன.
பத்திரிக்கைகளின் அரைநிர்வாணப் படங்களும், மழையில் நனைந்து அங்கங்களைக் காண்பிக்கும் ‘மானாட மயிலாட’ நடனமும் இன்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதில்லை. நேற்று குடும்பத்துடன் பார்க்கத் தகுதியற்றவையாகக் கருதப்பட்ட திரைப்படங்களெல்லாம் இன்று குடும்பத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன. நேற்று ஆபாசமென ஒதுக்கப்பட்டவை இன்று கலாச்சாரத்தின் அங்கமாக மாறி விட்டன. பத்திரிக்கைகளில் மட்டுமே வந்த கள்ளஉறவுச் செய்திகள், இன்று இல்லத்தரசிகளின் மனதைக் கவரும் ‘தொடர்’களாகி விட்டன. தனது இன்பத்திற்காக எதையும் செய்யலாம் என்ற வக்கிரம் சமூக வாழ்வின் அனைத்து விழுமியங்களையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றது.
பார்த்து ரசிக்க வேண்டிய குழந்தைகளைப் பிய்த்துக் குதறும் காமவெறி இன்றைக்குத்தான் தோன்றியது என்று கூற முடியாது. இதன் அடிவேர் பார்ப்பனியத்தின் மூடுண்ட சமூகத்தில் இருக்கின்றது. சாதியத்தைத் தனது ஆன்மாவாக வரித்திருக்கும் சமூகம், தேவதாசிகளையும், கோபுரங்களில் விதவிதமான கலவிச் சிற்பங்களையும் பார்வைக்கு வைத்திருக்கும் பண்டைய பாரதம், காமசூத்ராவை உலகிற்கு அளித்த பார்ப்பனியம், மேட்டுக்குடியினர் பாலியல் ருசிகளை அனுபவிப்பதற்கு மட்டும் வழி ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது.
இந்திய மக்களுக்கு பார்ப்பனியத்தின் சாபத்தால் பாலியல் பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. மணவாழ்க்கையில் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் கணவன் மனைவிக்கிடையிலான நேசம் பல காரணங்களால் குறையத் தொடங்கும்போது, சலிக்கத் தொடங்கும்போது, அவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து யாரும் சீர்செய்து கொள்வதில்லை. பிரிவு என்பது அவ்வளவு சுலபமான ஒன்றாக இல்லை.
இதுதான் வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தாலும் மணவாழ்வில் கிடைக்காத இன்பத்தை, குறிப்பாக ஆண்கள் (சில சமயங்களில் பெண்களும்) மணவாழ்விற்கு வெளியே தேடுகின்றார்கள். இவையெதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருக்கும் ஆசை நிறைவேறுவதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. சந்தர்ப்பங்கள் அதற்கு உதவுகின்றன. கள்ள உறவின் தோற்றுவாய் இப்படித்தான் இருக்கின்றது.
இத்தகைய சூழ்நிலைக்கு ஆட்படுவோர் திருட்டுத்தனத்தில் மட்டுமே சுதந்திரத்தைக் காண்கிறார்கள். இவர்களுடைய வாழ்வின் மற்ற வேலைகளை முதலில் மெதுவாகவும், பின்னர் வெகுவேகமாகவும் அரிக்கும் கரையானாகக் காமம் மாறிவிடுகின்றது. சிந்தனையின் மையத்தையே கைப்பற்றிவிடும் இந்த வெறி மற்றெல்லாச் சிந்தனைகளையும் தடுமாற வைக்கின்றது. சமூக வாழ்க்கையில் ஊக்கத்துடன் ஈடுபட வேண்டிய மனிதனை நைந்துபோக வைக்கின்றது. காதலைத் துறந்து காமத்தை மட்டும் ஒரு விலங்குணர்ச்சி போல துய்ப்பதற்கு வாய்ப்பளிக்கும் விபச்சாரமும் கூட இத்தகைய நபர்களின் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதில்லை.
அதனால்தான் கலவியில் புதிது என்ன? என்ற கேள்வி அடுத்து வருகின்றது. அந்தக்கால மன்னர்களும், ஜமீன்தார்களும், இந்தக்கால பணக்காரர்களும், முதலாளிகளும் எல்லையற்ற காமத்தில் திளைத்தாலும் திருப்தி கொள்வதில்லை. பாலுறவுச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கும் மேலை நாடுகளிலிருந்து கோவாவின் கடற்கரைக்கும், இலங்கைக் கடற்கரைக்கும் இளஞ்சிறுவர்களைத் தேடி வெள்ளையர்கள் வருகிறார்கள்.
விபச்சாரமே குலத்தொழில் என்று விதிக்கப்பட்ட சில ஆந்திரக் கிராமங்களில் புதிதாகப் பருவமெய்தும் சிறுமிகளுக்குப் பொட்டுக்கட்டும் சடங்கும் அவர்களை ஏலமெடுக்கும் முறையும் இன்றும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மேட்டுக்குடி வர்க்கத்தின் களியாட்டம் ஆண்களுக்கு மட்டுமே உரியது என்ற காலமும் மாறி வருகின்றது.
உலகமயமாக்கத்தால் பெருகியிருக்கும் பணக்கொழுப்பும், இணையத்தால் திறந்துவிடப்பட்டிருக்கும் இன்பவாயில்களும் இன்று பணக்காரப் பெண்களையும் வாடிக்கையாளர்களாக்கி விட்டன. இவர்களுக்குச் சேவை புரியும் ஆண் விபச்சாரிகளும் மாநகரங்களில் பெருத்து வருகின்றார்கள். மொத்தத்தில் உயர் வர்க்கத்தினர் இதற்கேற்ற மனநிலையையும், பணநிலையையும் ஒருங்கே பெற்றிருக்கின்றனர்.
இந்த வசதி இல்லாதவர்களுக்கு விரலுக்கேற்ற விபச்சாரம் இருக்கின்றது. என்றாலும் அதனைத் தேடிப்போவது அத்தனை சுலபமாய் நடப்பதில்லை. இரகசியம் காக்க முடியாத கள்ள உறவுகளோ கொலையில் முடிகின்றன. இத்தகைய சூழ்நிலையில்தான் ஒழுக்கக்கேடுகளை நியாயப்படுத்தும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இந்திய ஆண்களும் பெண்களும் கட்டுப்பெட்டித்தனத்தைக் கைவிட்டு பாலியல் சுதந்திரம் பெற்று வருவதைக் கொண்டாடுகின்றன. கள்ள உறவுகளும், திருமணத்துக்கு முந்தைய உறவுகளும் பெருத்து வருவதாக அவர்கள் வெளியிடும் புள்ளி விவரங்கள், ‘இவையெல்லாம் சகஜம்தான் போலும்’ என்ற கருத்தை வாசகர்கள் மனதில் எளிதில் உருவாக்குகின்றன.
செல்போனில் புழங்கும் நீலப்படங்கள், பாலியல் குற்றங்களையே கவர்ச்சிகரமான அட்டைப்படக் கட்டுரைகளாக்கும் பத்திரிக்கைகள், அவற்றையே தமது கதைக்கருவாகக் கொண்டிருக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகிய அனைத்தும், எரியும் தீயில் எண்ணெயை ஊற்றுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர், தான் இழந்து விட்ட இன்பம் குறித்து உள்ளுக்குள் புழுங்கத் தொடங்குகின்றனர். புதிய அதிருப்தியாளர்கள் உருவாக்கப் படுகின்றனர்.
தனிநபரின் காமம் புடைப்பதற்கேற்ற கலாச்சாரச் சூழலும் மறுபுறம் அதைத் தடை செய்யும் சமூகக் கட்டுப்பாடுகளும் கோலோச்சும் வாழ்க்கையில், என்னதான் இருந்தாலும் எல்லோரும் எல்லை மீறி விடுவதில்லை. அல்லது மனத்தளவில் எல்லை மீறினாலும் செயலில் மீறாத வண்ணம் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்கின்றார்கள். சமூக விழுமியங்களின் அடிப்படையில் தனது சொந்த உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளப் பலரும் போராடினாலும் இந்தப் போராட்டத்தில் தோல்வியுறுபவர்களும் இருக்கின்றார்கள்.
கீழே கிடக்கும் பணத்தை உரியவரிடம் சேர்ப்பதா, யாரும் பார்க்கவில்லை என்பதால் சட்டைப்பையில் வைத்துக் கொள்வதா என்று முடிவு செய்ய வேண்டிய தருணம் பலருக்கும் வருகின்றது. ஒருமுறை எல்லை மீறிவிட்டால், பிறகு வக்கிரம் இயல்பாக மாறிவிடுகின்றது. கடுகளவு குற்ற உணர்வுகூட இல்லாமல் அடக்கப்பட்ட காமத்தை இவர்கள் வெறியுடன் தீர்த்துக் கொள்கிறார்கள். இவர்களுக்குப் பிரச்சினையில்லாத தொல்லையில்லாத இலக்கு குழந்தைகள். வயதுவந்த பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்குவதும், ஒரு சிறுமியை வல்லுறவு செய்வதும் ஒன்றல்ல. பிந்தையதைச் செய்வதற்கு மிகுந்த வன்மம் வேண்டும்.
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்.
பள்ளிகளில் ஆதிக்கம் செய்யும் ஆசிரியர்கள் இப்படித்தான் மாணவிகளை வேட்டையாடுகின்றனர். பெயிலாக்கி விடுவேன், கொன்று விடுவேன் என்று அந்த மாணவி மிரளும் வண்ணம் மான் வேட்டை நடைபெறுகின்றது. கற்பின் புனிதம் குறித்த கருத்து ஆதிக்கம் செய்யும் சமூகத்தில் ஒரு மாணவி தனக்கு நேர்ந்ததை வெளியிலோ வீட்டிலோ அவ்வளவு எளிதாகச் சொல்லுவதில்லை. விதி விலக்காய் வெளியே தெரியும் சம்பவங்களிலிருந்துதான் இந்த வக்கிரத்தை அறிய வருகின்றோம். முனைவர் படிப்புக்காக கைடு உதவியுடன் ஆய்வு செய்யும் கல்லூரிப் பெண்கள் கூட இந்தக் கயவர்களின் மிரட்டலுக்கு அடிபணிய நேரிடுகின்றது.
சிறுவர்களும், சிறுமிகளும் வயது வந்த எதிர்பாலினத்தவருடன் உறவு கொள்ளும் நீலப்படங்கள்தான் இன்றைய சிறப்பாம். இதைப் பார்த்துத்தான் பணக்காரத் தம்பதியினர் கிளர்ச்சி அடைகிறார்களாம். சிறார்களை வல்லுறவுக்கு ஆட்படுத்தும் போக்கு உழைக்கும் மக்களிடத்தில் இருப்பதை விட மேல்தட்டு நடுத்தர வர்க்கத்திடம்தான் அதிகம் நிலவுகிறதென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவர்களிடம் குடும்ப உறவு பண உறவாகவும், பண்ட உறவாகவும் போலித்தனம் நிரம்பியதாகவும் இருப்பதால் இத்தகைய சீரழிவுகள் அதிகம் நடக்கின்றன.
குழந்தைகளை வல்லுறவு கொள்ளும் மனிதர்கள் எவரும் சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கேடிகளல்ல. அந்தக் குழந்தையின் உறவினராகவோ, அண்டை வீட்டாராகவோ பொதுவாக நன்னடத்தையுடன் வாழ்பவர்கள்தான். இவர்கள்தான் இன்னொருபுறம் தமது கைகளுக்கு அருகாமையில் இருக்கும் பச்சிளம் குழந்தைகளை அவை அறியாவண்ணம் குதறுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். தனது நன்னடத்தையைக் காப்பாற்றிவரும் அதே வேளையில் காம வக்கிரத்தைத் தீர்ப்பதற்கு இரகசியமான கருவிகளாகக் குழந்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள்.
ஒரு குழந்தையின் குழந்தைத் தன்மையை இரக்கமின்றி நசுக்கும் இந்தக் கயவர்கள் எவரும் மனநோயாளிகள் அல்ல. பிடிபடாத வரை இந்த வக்கிரத்தைத் தொடரலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தக் காரியத்தில் இறங்குகின்றார்கள். குழந்தைகளை வல்லுறவு செய்தல் ஒரு விபத்து போலவும் நடப்பதில்லை. அனைத்தும் திட்டமிட்டுதான் நடக்கின்றன.
ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு குழந்தை முழுமையான வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட வேண்டும் என்பதில்லை. பாலியல் வெறியுடன் ஒரு குழந்தையின் மீது கைகள் படரும் ஒவ்வொரு நிகழ்வும் வல்லுறவுதான். அந்த வகையில் பெரும்பான்மையான குழந்தைகள் இந்த அபாயத்தை சந்திக்கும் நிலையில்தான் இருக்கின்றார்கள். பருவம் வராத குழந்தைகளின் உணர்ச்சியைத் தூண்டி விடுதல், நீலப்படங்களைக் காண்பித்து உணர்வூட்டுதல் போன்றவற்றையும் இந்தக் கயவர்கள் செய்கின்றார்கள். உடலும், வயதும் முதிர்ந்த பின்னர் அறிய வேண்டிய பாலுறவை முன்பே அறிந்து கொண்டு அதற்கு பலியாகின்றார்கள் இந்தக் குழந்தைகள்.
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் சிறார்களுக்கு இது வன்முறையாக நடக்கின்றது. பெற்றோர் அக்கறையோ கண்காணிப்போ இல்லாமல் இணையத்தில் மூழ்கும் மாணவர்களோ பிஞ்சிலே வெம்பி விடுகின்றார்கள். தொலைக்காட்சியின் அத்தனை நிகழ்ச்சிகளும், விளம்பரங்களும் சிறுவர்களைப் பாலியலுக்கு அறிமுகம் செய்கின்றன.
பள்ளி ஆண்டுவிழாவில் குத்தாட்டங்களுக்கு நடனம் ஆடும் சிறுமி, தான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு வயதான பெண்ணின் விரகதாபத்தை அபிநயம் பிடித்துக் காட்டுகின்றாள்; அகமகிழ்கின்றார்கள் பெற்றோர்கள். அபிநயத்தில் ஆரம்பித்து அது அடுத்த கட்டத்திற்கு போவது இயல்பாக நடக்கின்றது.
பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்படும் குழந்தைகள் அதைப் புரிந்து கொள்ளும் அறிவு வளர்ச்சியைப் பெறும்போது பெரும் மனவியல் சித்திரவதைகளுக்கு ஆளாகின்றார்கள். தனக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து விட்டதாகவும், தனது புனிதம் கெட்டுப்போனதாகவும், தான் கோழையென்றும், இன்னும் பலவிதமாகவும் அவர்கள் கருதிக் கொள்வதால், இத்தகைய குழந்தைகளை சிகிச்சை அளித்து மீளப்பெறுவது என்பது மிகவும் சிரமமானதாகி விடுகின்றது.
ஆசிரியர்கள் இழைக்கும் கொடுமைகளால் மாணவிகள் அடையும் மனச்சிதைவுக்கு எல்லையில்லை. எதிர்கால வாழ்வை விருப்பத்துடனும், நம்பிக்கையுடனும் எதிர்கொள்ளும் மனத் துணிவை இவர்கள் இழக்கிறார்கள். விசயம் வெளியே தெரியக்கூடாது என்று மறைக்கப்படுவதால் அது உள்ளுக்குள்ளேயே மனதை ரணமாக்குகின்றது.
பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிப்பதற்கு பல ஆலோசனைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் முன்வைக்கப் படுகின்றன. குழந்தைகளின் மறைவுறுப்புக்களை யாரும் தொட அனுமதியாத வண்ணம் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளுடன் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி, விளையாடும் குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளுக்கு பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் என்று பல ஆலோசனைகள் பேசப்படுகின்றன.
இவற்றையெல்லாம் செய்யலாம்தான். இவை தடுப்பு மருந்து மட்டுமே. நோயின் மூலத்தை அறிந்து அழிக்கும் சக்தி இந்த மருந்திடம் இல்லை. ஆம், குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கும் கயவர்களைத் திருத்துவதற்கு எந்த மருந்தும் அரசிடமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமும் இல்லை. சொல்லப்போனால் இந்த நோயை முற்றச்செய்யும் வேலையைத்தான் உலகமயமாக்கத்தின் பண்பாடு செய்து வருகின்றது. இயற்கையான காமம் செயற்கையாக உப்பவைக்கப்படும் இன்றைய சூழலில் இவை ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடுவது மிகவும் கடினமான காரியம்.
முக்கியமாக இந்த மனவிகாரம் உள்ளவர்கள் என எல்லோரையும் சொல்ல முடியாதுதான். அதே சமயம் இந்தக் கொடுமையைச் செய்யப் போகிறவர்கள் யார் என்பதையும் கண்டு பிடிக்க முடியாது. அது அந்தக் குழந்தையின் மாமாவாகவோ, சித்தப்பாவாகவோ, ஆசிரியனாகவோ, அண்டை வீட்டு இளைஞனாகவோ இருக்கலாம்.
நான்கு சுவர்களுக்குள் நமது குடும்பத்தின் நலனை மட்டும் பேணிக் கொள்ளலாம் என்றுதான் பலரும் கருதிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தெருவில் இறங்காமலா இருந்துவிட முடியும்? ஒழுக்கக் கேட்டையும் வக்கிரத்தையும் தோற்றுவிக்கும் சமூகச் சூழலுக்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டும்தான் அவற்றை எதிர்த்து நிற்க முடியும். அந்தக் கிருமிகளிடமிருந்து நம்மையே தற்காத்துக் கொள்ளவும் முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக