புத்திசாலித் தந்தை
(பழசு)
ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார்.
செல்வந்தர்
என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக
சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.
அவருக்கு ஒரே மகன்.
ஒரே பிள்ளை என்பதால் மிகவும் செல்லமாக வளர்ந்தவன். அளவுக்கு மிஞ்சி செல்லம்
கொடுக்கப் பட்டதால், வளர்ந்து வாலிபனாகி, தறுதலையானான். படிப்பு ஏறவில்லை.
எந்தவிதமான உடலுழைப்பும் இல்லாமல், சோம்பேறியாகிப் போனான். வெட்டியாய் ஊர்
சுற்றுவதே அவனுடைய அன்றாட வேலை.
தந்தை முதுமையடைந்தார்.
தந்தை சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துக்களையெல்லாம் மகன் விரைவாக அழிக்கத் தொடங்கினான்.
சொத்துகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.
எஞ்சியது குடியிருக்கும் வீடும் வீட்டுக்குப் பின்புறம் கிடந்த, பரந்த ஒரு நிலப் பரப்பு மட்டுமே.
தந்தை, மகனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் சொல்லிப் பார்த்தார். அவன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அந்தத் தந்தை நோய்வாய்ப் பட்டார்.
தனக்கு இறுதிவேளை நெருங்கி விட்டதை உணர்ந்தவர், மகனை அருகில் அழைத்தார்.
“மகனே, எனக்குக் கடைசி நேரம் … நெருங்கிடுச்சுன்னு நெனக்கிறேன். ஒன்கிட்ட … ஒன்கிட்ட … ஒரு … ஒரு … ரகசியம் சொல்லனும்”
“சொல்லுங்கப்பா”
“நம் வீட்டுக்கு …. பின்புறமா … பெரிய நெலம் … பெரிய நெலம் … சும்மா கிடக்குதில்லயா?”
“ஆமா, ஏன் அத வித்துட்டீங்களா?”
“இல்லப்பா … இல்லே … அங்க ஒரு … அங்க ஒரு … எடத்துலே …”
“எடத்துலே? … சொல்லுங்கப்பா”
“யாருக்கும் … தெரியாம … தெரியாம … தெரியாம … ஒரு … ஒரு … பொதயல … பொதயல … பொதயல”
“சீக்கிரம் சொல்லுங்கப்பா”
“பொ .. த .. ச் ..சி”
“எந்த எடத்துலப்பா? யப்பா, சீக்கிரம் சொல்லுங்கப்பா”
“……….”
“யப்பா”
“……….”
“யப்பா”
“……… ”
இடத்தைச் சொல்லாமல் புதையல் செய்தியை மட்டும் சொல்லி விட்டுத் தந்தை உயிரை விட்டார்.
புதையல் ஆசையினால், தந்தை சொல்லிச் சென்ற அந்தப் பரந்த கொல்லைப் புறத்தைத் தோண்டத் தொடங்கினான்.
அகலத் தோண்டத் தொடங்கியவன், ‘புதையல் இன்னும் கொஞ்சம் அடியில் இருக்குமோ?’ என்ற ஆவலில் ஆழத் தோண்டினான்.
பாதி நிலத்தைப் பல நாட்களாகத் தோண்டியும் ‘புதையல்’ கிடைத்த பாடில்லை.
‘கடைசிவரைத் தோண்டிப் பார்த்து விடுவது’ என்ற வெறியோடு மீதி நிலத்தையும்
தோண்டினான், தோண்டினான், தோண்டினான் தோண்டி முடித்தே விட்டான் . இறுதியில்,
புதையல் இல்லை என்றானது.
வெளியூர் சென்றிருந்த அவனுடைய விவசாயித் தாய்மாமன், பெரியவர் இறந்த செய்தியறிந்து துக்கம் விசாரிக்க வந்திருந்தார்.
கொல்லைப் பக்கம் சென்றவர், முழு நிலமும் தோண்டப் பட்டுக் கிடப்பதைப் பார்த்து விட்டு, மருமகனிடம் வினவினார்.
‘புதையல்’
செய்தியை அவன் சொல்ல, சற்று நேரம் சிந்தித்து விட்டு, “ஒன்னோட ஒழப்பத்தான்
ஒங்கப்பா ‘பொதயல்’னு சொல்லிருக்காரு . எவ்ளோ பெரிய நெலம் பாத்தியா? தரிசா
கெடந்த இந்த நெலத்திலே இப்போ தென்னை வளக்கலாம்; காய்கறிச் செடிகள் பயிர்
செய்யலாம். பெரிய அளவு வெவசாயம் செஞ்சி நெறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று
யோசனை சொன்னதோடு, இரண்டு நாட்கள் அங்குத் தங்கியிருந்து தொடக்கமாகச் செய்ய
வேண்டியவைகளுக்கு அவரே முன்னின்று வழி காட்டினார்.
சில
மாதங்கள் கழித்து அடுத்தமுறை அவர் வந்தபோது, சோம்பேறித் தறுதலையாய்த்
திரிந்த மருமான் சிறந்த உழைப்பாளியாக உயர்ந்து நின்றதைக் கண்டு, தம் மகளை
அவனுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்!
oOo
புத்திசாலி மகன்
(புதுசு)
நியூயார்க்
நகரின் ஓரத்திலுள்ள ஒரு சிற்றூரில் 40 ஆண்டுகளாக வசித்து வரும் ஓர்
அரபியர், தம் வீட்டுத் தோட்டத்தில் மூலிகைச் செடிகளும் உருளைக் கிழங்கும்
பயிரிட விரும்பினார்.
அவரோ
வயது முதிர்ந்தவர்; தனியாள். பாரீஸின் கல்லூரி ஒன்றில் கல்வி கற்றுக்
கொண்டிருக்கும் தம் மகனுக்குத் தம் ஆசையையும் இயலாமையையும் விவரித்து ஒரு
மின்மடல் எழுதினார்:
“அன்பு மகன் அஹ்மதுக்கு,
நம்
வீட்டுத் தோட்டத்தில் உருளைக் கிழங்கு பயிரிட எனக்குக் கொள்ளை ஆசை. என்ன
செய்ய? முதுமை என்னை வாட்டுகிறது. நீ மட்டும் இங்கிருந்தால் தோட்டத்தை
உழுது செப்பனிட எனக்கு உதவுவாய் என்பது திண்ணம்.
அன்புடன்
- உன் தந்தை”
மகனிடமிருந்து உடனே மறுமொழி வந்தது:
“என் அருமைத் தந்தையே ,
தோட்டத்தைத் தோண்டி விடாதீர்கள். அங்குத்தான் முக்கியமான ஒரு பொருளைப் புதைத்து வைத்திருக்கிறேன்.
உங்கள் அன்பு மகன்
- அஹ்மது”
அன்று மாலை நான்கு மணியிருக்கும்.
வனத்துறை அலுவலர்கள் சிலர் புடைசூழ, எஃப் பி ஐ அதிகாரிகள் அரபியரின்
வீட்டுத் தோட்டத்திற்குள் படையெடுத்தனர். தோட்டத்தை அங்குலம்-அங்குலமாகத்
தோண்டித் துருவி, தேடு-தேடென்று ‘முக்கியப் பொருளை’த் தேடினார்கள்.
தோட்டத்தையே சல்லடை போட்டு சலித்தும் ஒன்றும் கிடைக்காமல் இறுதியில்
சலிப்புற்றுச் சென்று விட்டனர்.
அடுத்த நாள் அஹ்மதிடமிருந்து இன்னொரு மின்மடல் வந்தது:
“அன்புத் தந்தையே,
உருளை பயிரிடுவதற்கு ஏற்றதாகத் தோண்டப் பட்டு, இப்போது நம்முடைய தோட்டம்
சீரமைக்கப் பட்டிருக்கும் என்று நம்புகிறேன். ஏதோ, இங்கிருந்து கொண்டு
என்னால் உங்களுக்கு உதவ இயன்றது இவ்வளவுதான்.
அன்பு மகன்
- அஹ்மது”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக