வரலாறு எப்படி ஆளும் வர்க்கங்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதை, ‘கடந்த காலத்தைக்
கட்டுப்படுத்துகிறவர்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்; நிகழ் காலத்தைக்
கட்டுப்படுத்துகிறவர்கள் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்’ என்ற ஜார்ஜ்
ஆர்வெல்லின் கூற்று தெளிவாக்குகிறது. தங்கள் நலன்களுக்கேற்ப வரலாற்றைத் திருத்தி
எழுதும் கலையில் ஐரோப்பிய, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் வரலாற்றாசிரியர்கள்
கைதேர்ந்தவர்கள். மறைக்கப்படும் வரலாற்றின் இருண்ட பக்கங்களை உலகறியச் செய்வதிலும்
வரலாற்றின் உந்துசக்தியாக விளங்கும் மக்கள் போராட்டங்களைப் பதிவு செய்வதிலும்
உழைக்கும் வர்க்க, சாதாரண பெரும்பான்மை மக்களின் நலன் நாடும் வரலாற்றாசிரியர்களின்
அறிவுலகப் பணி அசாதாரணமானது. அத்தகைய பணியைத் தன் வாழ்நாள் முழுவதும் இடையறாது
மேற்கொண்டிருந்தவர் மாபெரும் அமெரிக்க வரலாற்றாசிரியர் ஹோவர்ட் ஜின் (Howard Zinn).
ஜின்னை அமெரிக்க வரலாற்றாசிரியர் என்பதைவிட அமெரிக்க மக்களின் வரலாற்றாசிரியர்
என்பதே பொருத்தமானது. தன்னை அவர் ஒரு மார்க்சியவாதியாக ஒருபோதும்
அடையாளப்படுத்திக்கொண்டதில்லை. ஆனாலும் பலர் அவரை மார்க்சிய வரலாற்றாசிரியர் என்று
கூறுவது வழக்கம். தான் அப்படி அழைக்கப்பட்டதை அவர் பெருமைக்குரிய விஷயமாகவே
கருதினார். ‘தத்துவ ஞானிகள் உலகைப் பல் வேறு வழிகளில் விளக்க மட்டுமே
செய்திருக்கிறார்கள், ஆனால் விஷயம் என்னவோ அதை மாற்றுவதுதான்’ என்று கார்ல்
மார்க்ஸ் கூறியதற்கேற்பவே ஒரு வரலாற்றாசிரியன் பற்றிய ஜின்னின் புரிதல்
அமைந்திருந்தது. ஒரு வரலாற்றாசிரியனின் பணி கடந்த காலத்தை ஆராய்வதும் நிகழ்காலத்தை
வெறுமனே பதிவு செய்வதும் அல்ல. “வரலாற்றின் அரசியல்” என்னும் தனது புத்தகத்தில் அவர்
எழுப்பிய கேள்வி இது: ‘‘பசியிலிருந்தும் வெடிகுண்டுகளிலிருந்தும் இன்னமும்
காப்பாற்றப்படாதிருக்கும் குழந்தைகள் நிரம்பியிருக்கும் உலகில் வரலாற்றாசிரியன்
தன்னையும் தனது எழுத்தையும் தான் ஆழமாக நம்பும் இலக்குகளுக்காகச் செயல்படுத்த
வேண்டாமா? வரலாற்றாசிரியர்களான நாம் முதலில் மனிதர்கள் அல்லவா, அதன் காரணமாகத்தானே
அறிஞர்களாக இருக்கிறோம்?” ஆக, ஜின் முதலில் உன்னதமான மனிதர், பின்னரே அவரது பிற
அடையாளங்களான அறிஞர், வரலாற்றாசிரியர் என்பதெல்லாம். அப்படி நினைவுகூரப்படுவதையே
அவர் விரும்பினார். தனது வாழ்நாள் முழுவதும் வன்முறைக்கும் போருக்கும் எதிராக எழுதியும் பேசியும் செயல்பட்டும் வந்த ஜின் இரண்டாம் உலகப் போரின்போது பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நகரங்கள்மீது வெடிகுண்டுகள் வீசியவர் என்பதை நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கும். வீட்டில் நிலவிய வறுமையின் காரணமாகக் கல்லூரிக் கல்வியைத் தொடர முடியாமல் 17 வயதிலேயே புரூக்லின் கடற்படைத் தளத்தில் கப்பல் கட்டுமானப் பணியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். இதனால் கட்டாயப் போர்ப் பணியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டாம் உலகப் போர், ஹிட்லரின் பாசிசத்திற்கும் நாஜிகளின் தேசிய மற்றும் இனவெறிக்கும் எதிரான போர் என்று அவர் நம்பியதன் காரணமாகவே தானாக முன்வந்து அமெரிக்க விமானப் படையில் வெடிகுண்டுகள் எறிபவராகச் சேர்ந்தார். வெடிகுண்டுகள் வீசுபவராக இருந்தபோது தனது செயல் மக்கள்மீது ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி அறியாதவராக இருந்ததையும் பின்னர் அமெரிக்க அணுகுண்டு வீச்சால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஹிரோஷிமா நகரத்தைச் சேர்ந்த மக்களைப் பற்றி ஜான் ஹெர்ஸே என்பவர் வெளியிட்ட அறிக்கையைப் படிக்க நேர்ந்தபோதே போரின் கோர விளைவுகள் பற்றித் தான் உணர்ந்ததையும் பல சந்தர்ப்பங்களில் ஜின் விவரித்திருக்கிறார். உலக வர்த்தக மையத்தின் மீதான தாக்குதல் அமெரிக்க மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்குக் காரணம், அதுவரை அமெரிக்கா போரின் அழிவுகள் எதையும் சந்தித்திருக்கவில்லை என்பதும் (ஹவாய் தீவிலிருந்த அமெரிக்கக் கடற்படைத் தளமான பியர்ல் ஹார்பர்மீது ஜப்பானியக் கடற் படை நடத்திய தாக்குதல் நீங்கலாக), பொதுவாக போர் ஏற்படுத்தும் அழிவுகளை நேருக்குநேர் சந்திக்கும் வரை மக்கள் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்வதில்லை எனக் கூறும் ஜின் தானும் ஐந்து மைல் உயரத்திலிருந்து குண்டுபோடுபவராக இருந்தபோது கீழே பூமியில் எழுந்த கதறல்களைக் கேட்க முடியாதவராக இருந்ததைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். இரண்டாம் உலகப் போரானது ஹிட்லரின் அக்கிர மங்களை எதிர்த்துத் தர்மத்தை நிறுவுவதற்காக அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியனால் நடத்தப்பட்ட தர்ம யுத்தம் அல்ல, மாறாக ஹிட்லரின் சாம்ராஜ்யத்தை ஒழித்து அங்கே தங்கள் சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்காக நடத்தப்பட்ட யுத்தம் எனக் கூறிய தனது சகவீரரின் கருத்து ஜின்னைத் திகைக்கவைத்தாலும் ஏற்க முடியவில்லை. ஆனால் அடுத்த சில வருடங்களில் அந்தக் கருத்து எவ்வளவு உண்மையானது என்பதை ஜின் முழுமையாக உணர்ந்துகொண்டார். போரை முடிவுக்குக் கொண்டுவரவே ஜப்பான்மீது அணுகுண்டு வீசப்பட்டது என்ற அமெரிக்க அரசின் கூற்று எவ்வளவு அப்பட்டமான பொய் என்பதைத் தனது சொந்த ஆய்வுகளின் மூலமும் பிற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின் மூலமும் அறிந்தார். மிக மிக அரிதான, தவிர்க்கவியலாத சந்தர்ப்பங்களில், அதிலும் பெரும்பாலான மக்களின் நலன்களுக்குகந்த மாற்றங்களைக் கொண்டுவரும் என்ற சூழலில் ஓரளவு வன்முறையை அனுமதிக்கலாம் என்பதைத் தவிர்த்து அவர் எப்போதும் அதை எதிர்த்தே வந்தார். போரை முற்றிலுமாக நிராகரித்தார். போரால் விளையும் பாகுபாடற்ற உயிரிழப்புகளும் (ராணுவத்தினர், பொதுமக்கள் என்ற பாகுபாடில்லாமல்) அழிவுகளும் நிச்சயமானவை. ஆனால் போரால் விளையக் கூடிய நன்மைகள் என்று சொல்லப்படுகிறவை, அவை எவ்வளவு நல்லவையாக இருந்தபோதிலும் நிச்சயமற்றவை. ஆகவே போர்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை என்பது அவரது கருத்து. ஆப்கானிஸ்தான்மீதான அமெரிக்காவின் தாக்குதலைப் பற்றிக் கூறுகிறபோது, ‘‘இன்றைய ‘போர்’ பற்றி இரு அறநெறித் தீர்ப்புகளை உருவாக்க முடியும் என்று நம்புகிறேன்: 9/11 தாக்குதல் மனித குலத்திற்கெதிரான குற்றம், நியாயப்படுத்த முடியாதது. ஆப்கானிஸ்தான்மீதான போரும் அத்தகைய குற்றமே, நியாயப்படுத்த முடியாதது.’’ 1922இல் புரூக்லின் நகரில் யூதத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்த ஜின், ‘அமெரிக்கக் கனவு’, (அமெரிக்கர்கள் அனைவரும் சமம், கடுமையாக உழைக்கத் தயங்காதவர்களை அமெரிக்கா ஒருபோதும் கைவிடுவதில்லை, அவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை) என்பது எத்தகைய ஏமாற்று என்பதைத் தனது இளமைப் பருவத்திலேயே உணர்ந்தவர் ஜின். “ஆஸ்திரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறியிருந்த யூதரான, நான்காம் வகுப்புவரை மட்டும் படித்திருந்த என் தந்தை மிக மிகக் கடுமையாக உழைத்த போதிலும் தன் மனைவி மற்றும் நான்கு மகன்களுக்குப் போதுமான உணவு, ஆடைகள் அளிக்க முடியாதவராக, எங்களுக்கு உடல்நலம் சரியில்லாதபோது கவனிக்க முடியாதவராக இருந்தார். எங்களுக்கு உணவளிப்பதற்காக, எங்களுக்கு உடைகள் வாங்க, எங்கள் மருத்துவத்திற்காக எங்களது தாய் இரவு பகல் பாராது உழைக்க வேண்டியிருந்தது. எங்கள் பெற்றோரின் வாழ்க்கை முடிவற்ற போராட்டமாக இருந்தது. திகைக்கவைக்குமளவிற்குச் செல்வம் பெற்றிருப்பவர்கள் இந்த நாட்டில் இருப்பதையும் நான் அறிவேன். அவர்கள் என் பெற்றோர் போன்ற உழைப்பாளிகள் அல்ல. இந்தச் சமூக அமைப்பு நியாயமான ஒன்றல்ல’’ என்று தனது இளமைப் பருவத்தைப் பற்றி ஜின் கூறுகிறார். தனது 17 வயதில், கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கை புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது தனது சிந்தனையின் மீது பெரும் தாக்கம் செலுத்தியதாக ஜின் குறிப்பிடுகிறார். அரசு எப்படி அனைவருக்கும் பொதுவானதல்ல, அது எப்படிச் சுரண்டுபவர்களின் நலன்களைக் காக்கும் எந்திரமாக இருக்கிறது என்பதைப் பற்றிய புரிதலை, பொதுவுடமையின் அவசியத்தை கம்யூனிஸ்டு அறிக்கை அவருக்கு அறிவுபூர்வமாக உணர்த்தியது. தன்னை அவர் ஜனநாயகப் பொதுவுடமை வாதி என்றே எப்போதும் அழைத்துக்கொண்டார். சோவியத் யூனியனில் கம்யூனிசத்தின் பெயரில் ஸ்டாலின் நடத்திய அக்கிரமங்கள் 1950களில் வெளியான போது ‘‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’’ என்ற கருத்தாக்கத்தின் மீது அவருக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. இது அவரை, பாட்டாளி வர்க்கப் புரட்சிக்குப் பின்னர் அரசு என்ற நிறுவனம் எந்த வடிவத்திலும் இருக்கக் கூடாது என்று வாதிடும் அராஜகவாதத் தத்துவத்தின் பால் திருப்பியது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் கருத்தாக்கம் மறுசிந்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் கருதினார். ஆனால் சோவியத் யூனியன் அல்லது வேறு சோசலிச நாடுகளில் நடந்த அக்கிரமங்களுக்கு மார்க்ஸின் சிந்தனைகள்தாம் காரணமென அவர் ஒருபோதும் வாதிட்டதில்லை. மாறாக அப்படிச் சொல்லப்படும் குற்றச்சாட்டு களுக்குப் பதிலளிக்கும் வகையில் விணீக்ஷீஜ் வீஸீ ஷிஷீலீஷீ என்னும் ஓரங்க நாடகம் ஒன்றை எழுதினார். அதில் மார்க்ஸைப் பற்றிய அவரது மிகப் பரிவான பார்வையை நாம் காணலாம். மார்க்ஸின் கம்யூனிசச் சிந்தனைகளுக்கும் மிகாயில் பகூனின் போன்றோரின் அராஜகவாதச் சிந்தனைகளுக்கும் இடையிலான இடைவெளியானது இட்டு நிரப்பப்பட முடியாத ஒன்று என்பதாகவோ இருசிந்தனைகளும் இருவேறு துருவங்கள் என்றோ அவர் கருதவில்லை. சித்தாந்த - தத்துவார்த்தரீதியான வாதங்களுக்கு அவர் அளித்த முக்கியத்துவத்தைவிடத் தார்மீகரீதியான வாதங்களுக்கு அளித்த முக்கியத்துவம் மிக அதிகம். கோட்பாட்டாக்கம் அவரை அதிகம் கவர்ந்ததில்லை. இதன் காரணமாகத்தான் கம்யூனிஸ்டு அறிக்கை, மூலதனம் முதல் தொகுதி ஆகிய மார்க்ஸின் நூல்களைப் பெரிதும் போற்றிய ஜின், மூலதனம் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள், மூன்று பாகங்களைக் கொண்ட உபரி மதிப்பு தத்துவம் ஆகிய நூல்களை நேர விரயம், வீண் வேலை எனக் கருதினார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அப்போரில் பணியாற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையில் இளங்கலைப் பட்டப் படிப்பை நியூயார்க் பல்கலைக் கழகத்திலும் பின்னர் வரலாற்றுத் துறையில் முது கலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பைக் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் முடித்தார். படிப்பிற்கிடையில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார். ஆனால் குடும்பத்தையும் குழந்தைகளையும் காப்பாற்ற இந்த வருமானம் போதுமானதாக இல்லாததால் அவருடைய மனைவி ரோஸ்லின் ஷக்டரும் வேலை செய்ய வேண்டியிருந்தது. அவரது எழுத்துக்கள் அனைத்துக்கும் எடிட்டர் முதல், விமர்சகர் அவர் மனைவியே. முனைவர் பட்டம் பெற்ற பின்னர் 1956இல் ஜார்ஜியா மாநிலத்தின் தலைநகரான அட்லான்ட்டாவில் இருந்த கருப்பினப் பெண்களுக்கான கல்லூரியில், ஸ்பெல்மென் கல்லூரி, வரலாறு மற்றும் சமூக அறிவியல் துறையின் தலைவராக, வருடத்திற்கு 4500 டாலர் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இது அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டம். நிறவெறி, நிற அடிப்படையிலான பிரிவினை மற்றும் பாகுபாட்டால் அமெரிக்கா மிக மோசமாகப் பீடிக்கப்பட்டிருந்த காலம். குறிப்பாக ஜார்ஜியா போன்ற அமெரிக்காவின் தென்பகுதி மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக இருந்தது. அதே நேரத்தில், நிறவெறிக்கும் அதன் பாகுபாட்டிற்கும் எதிராக ஆப்பிரிக்க - அமெரிக்க மக்களின் போராட்டங்கள் உக்கிரம் பெற்றுவந்த கால கட்டம் அது. ஏற்கனவே இடதுசாரி சிந்தனையாளராகவும் வர்க்கப் போராட்டத்திற்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டத்திற்கும் உள்ள நெருக்கமான பிணைப்பை உணர்ந்திருந்த ஜின்னுக்கு நேரடிப் போராட்டங்களில் பங்குபெறுவதற்கான வாய்ப்பை இந்த வேலை தந்தது. தன்னுடைய மாணவிகளை நிறவெறிப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில் பங்குபெற ஊக்குவித்ததற்காகவும் வழிகாட்டியதற்காகவும் அத்தகைய போராட்டங்களில் பங்குபெற்றதற்காகவும் 1963இல் வேலையைவிட்டு நீக்கப்பட்டார். பின்னர் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்த அவர் 1988இல் ஓய்வுபெறும் வரை அங்கே பணியாற்றினார். அலைஸ் வாக்கர் உட்பட ஜின்னால் உத்வேகம் பெற்ற மாணவ மாணவிகள் ஏராளம். தனது அறிவுலகச் செயல்பாடுகளையும் அரசியல் செயற்பாடுகளையும் தனித்தனியான செயல்பாடுகளாக ஜின் ஒருபோதும் கருதவில்லை. 1980இல் வெளியான, அமெரிக்க மக்கள் வரலாறு என்னும் அவரது புத்தகம் அமெரிக்க வரலாற்றுத் துறைக்கு அவரது மாபெரும் கொடை. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492இல் அமெரிக்காவைக் ‘கண்டு பிடித்த’போது அங்கிருந்த பழங்குடி மக்கள்மீது கொலம்பஸ் தனது தங்க வேட்டையின் பொருட்டு நிகழ்த்திய படுகொலைகள் முதற்கொண்டு அமெரிக்காவின், அமெரிக்க மக்களின் போராட்ட வரலாற்றை இப்புத்தகம் நேரடி மொழியில் கூறியது. அதுவரை அமெரிக்காவைக் ‘கண்டுபிடித்த’ நாயகனாக மட்டும் அறியப்பட்டிருந்த கொலம்பஸின் இன்னொரு கோர முகம் பல லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் பார்வைக்கு வந்தது. அமெரிக்காவில் அதுவரை வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறாதிருந்த பல்வேறு சமூக மற்றும் தொழிற்சங்கப் போராட்டங்களை மக்களின் பார்வைக்குக் கொண்டுவந்தார். தீவிர ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ஓர் ஆராய்ச்சி நூல் பத்து லட்சத்திற்கும் அதிகமான பிரதிகள் விற்றது அதுவே முதல்முறை. இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டதன் 20ஆம் ஆண்டு விழாவில் புத்தகத்தை வெளியிட்ட ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகத்தின் உரிமையாளர் ரூபர்ட் முர்டாக் (ஆம், மேற்கத்திய ஊடக உலகின் முடிசூடா மன்னன் என்று ‘போற்றப்படும்’ அதே முர்டாக்) கலந்துகொண்டார் என்றால் அந்தப் புத்தகத்தின் செல்வாக்கைத் தெரிந்துகொள்ளலாம். ஒரு தீவிரமான இடதுசாரிச் சிந்தனையாளரால் எழுதப்பட்ட புத்தகம் என்ற போதிலும் அமெரிக்காவின் ஏராளமான பள்ளிகள், கல்லூரிகளில் இப்புத்தகம் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருப்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்த ஒரு புத்தகத்தின் மூலம் மட்டுமே இன்னும் பல எதிர்காலத் தலைமுறையினருடன் ஜின் நேரடியாக உரையாடுவார். தனது வாழ்நாள் முழுவதையும் சமூக அநீதிகளுக்கு, பொருளாதாரச் சுரண்டலுக்கு, வன்முறை, போருக்கு எதிராக அரசியல் மற்றும் ஆராய்ச்சித் தளங்களில் செயல்படுவதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட ஜின் ஏராளமான புத்தங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். டெனிஸ் டிராட் என்ற அறிவொளிக் காலகட்டச் சிந்தனையாளர் வால்டேர் பற்றிக் கூறியது ஹோவர்ட் ஜின்னுக்கும் முற்றிலும் பொருந்தும்: ‘‘பிற வரலாற்றாசிரியர்கள் எங்களுக்கு உண்மைகளைத் தெரிவிப்பதற்காக எங்களுக்கு உண்மையைச் சொல்கிறார்கள். பொய்க்கு, அறியாமைக்கு, இரட்டை வேடத்திற்கு, மூடநம்பிக்கைக்கு, சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தீவிரமான வெறுப்பை எங்கள் இதயத்தில் உருவாக்குவதற்காக நீங்கள் எங்களுக்கு உண்மையைச் சொல்கிறீர்கள்; அந்த உண்மைகளைப் பற்றிய நினைவுகள் மறைந்த பிறகும்கூட அந்தக் கோபம் மறையாதிருக்கிறது.” |
0 கருத்துகள்:
கருத்துரையிடுக