ஒரு பின்னிரவுத் தொலைபேசி அழைப்பு வழியாகத்தான் மிகப் புகழ்பெற்ற
நித்தியானந்தா-ரஞ்சிதா படக்காட்சிகள் சன் தொலைக் காட்சியின் செய்தி அலைவரிசையில்
ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததைத் தெரிந்துகொண்டேன். நான் இருந்த வீட்டில்
தொலைக்காட்சி இல்லாததால் என்னால் அன்றைய இரவு அந்தப் படக்காட்சிகளைப் பார்க்க
முடியவில்லை. வாய்ப்பைத் தவற விட்டுவிட்ட வருத்தம் இருந்தாலும் இணையதளங்களில் அவை
காணக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன்.
ஆனால் இணைய தளங்களைத் தேடிப்போக வேண்டிய தேவையில்லாமல் அடுத்த இரண்டு மூன்று
நாள்கள்- கருணாநிதியின் கண்டனத்தைத் தொடர்ந்து நிறுத்தப்படுவதுவரை - இடைவிடாது
அந்தக் காட்சிப் பதிவுகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக் காட்சி. அந்தக் காட்சிகளுக்கு மறுநாள் ஒரு செய்தி அந்தஸ்துக் கிடைத்திருந்தது. ‘ஆபாசமான, தமிழ்க் கலாச்சாரத்திற்கு எதிரான’ அந்தக் காட்சிகளை மனைவி மக்களுடன் உட்கார்ந்து கூச்சப்படாமல் பார்ப்பதற்கு அந்த அந்தஸ்துதான் உதவியது. எனக்கு அந்தக் காட்சிப் பதிவுகள் ஆபாசமானவையாய், பாலியல்ரீதியல் கிளர்ச்சியூட்டக் கூடிய சக்தியுள்ளவையாய்த் தென்படவில்லை. தமிழ் சினிமாவின் பாடல் காட்சிகளில் பல இதைவிடச் சக்திவாய்ந்தவை. நவீனத் தகவல் தொடர்புக் கட்டமைப்பு போர்னோவைப் பாமரனுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது. நித்தியானந்தா-ரஞ்சிதா படக்காட்சிப் பதிவுகள் எந்த வகையிலும் பாலியல்ரீதியில் கிளிர்ச்சியூட்டக்கூடியவையல்ல என்பது அவற்றில் சிலவற்றோடு பரிச்சயம் உள்ள எவரும் ரகசியமாக ஒப்புக்கொள்ளக்கூடிய உண்மை. ஆனால் அது எனக்கு வேறொரு வகையில் முக்கியமானதாகவும் கிளர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருந்தது. காவி நிறமுடைய ஒழுக்கத்தின் கொடி கிழிந்து தொங்குவதைப் பார்க்கும்போது ஏற்பட்ட கிளர்ச்சி அது. ஓரிரு வாரங்களுக்கு முன்னால் கிழிந்து தொங்கிய ஒழுக்கத்தின் மற்றொரு கொடி மார்க்சிஸ்ட்டுகளுக்குச் சொந்தமான அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் பொறிக்கப்பட்ட சிவப்புக்கொடி. சிவப்பும் காவியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நிறங்களா என எனக்குத் தெரியாது. ஆனால் இவ்விரு தரப்பினரின் ஒழுக்கப் பார்வைகளும் அடிப்படையில் ஒன்றுதான் என்பதை உணர்த்துவதாயிருந்தன மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் தொழிற்சங்கவாதியுமான உ.ரா. வரதராசனின் தற்கொலையும் அது தொடர்பாக உருவான விவாதங்களும். உ.ரா.வரதராஜனைத் தற் கொலைக்குத் தூண்டிய காரணிகளில் முதன்மையானது ஒழுக்கம் சார்ந்து அவரும் கட்சியும் கொண்டிருக்கும் பழமைவாதக் கண்ணோட்டம்தான். வரதராஜனுக்கும் விழுப்புரத்தில் அவருடைய மனைவி சரஸ்வதி நடத்திய சேவை இல்லத்தில் பணிபுரிந்த ஒரு பெண்ணுக்குமிடையே ‘தொடர்பு’ இருந்ததாகவும் அதுபற்றி அவரது மனைவி ஜனநாயக மாதர்சங்கத்தின் வாசுகி, சுதா ராமலிங்கம் ஆகியோரது உதவியுடன் கட்சிக்குப் புகார் செய்ததாகவும் அதன் பேரில் விசாரணை நடத்திய மூன்று உறுப்பினர் குழுவின் அறிக்கையின்படி கட்சியின் மாநில அமைப்பு செய்த பரிந்துரையின் பேரில் அரசியல் தலைமைக்குழு அவரைக் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விடுவித்ததாகவும் சொல்லப்படுகிறது. கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைகளால் மனம் உடைந்துபோன வரதராஜன் தன் வீட்டினருக்குச் சில கடிதக் குறிப்புகளை எழுதி வைத்துவிட்டுக் காணாமல் போனார். பத்து நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் உருக்குலைந்த நிலையில் போரூர் ஏரியில் கண்டெடுக்கப்பட்டது. ஈழப்பிரச்சினைக்குப் பின்னர் அதற்கிணையான பரபரப்பு முக்கியத்துவமுடைய செய்திகள் கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருந்த ஊடகங்களுக்கு வரதராஜனின் தற்கொலையும் அதோடு தொடர்புடையதாகக் கருதப்படும் பாலியல் அம்சங்களும் கைகொடுத்தன. வரதராஜன் ஒரு பிரபலமான அரசியல் தலைவர் என்பது பரபரப்பைக் கூட்ட உதவும் என அவை யூகித்தன. வரதராஜன் காணாமல் போனதன் பின்னணி பற்றியும் அவர் குடும்பத்தினருக்கு எழுதிவைத்த கடிதக் குறிப்புகள் பற்றியும் செய்திக் கட்டுரைகள் வெளியிட்ட நக்கீரன் விறுவிறுப்பும் மர்மங்களும் நிரம்பிய புனைவுகளாக அந்தச் செய்திக் கட்டுரைகளை மாற்ற முயன்றது. ஊடகங்களில் கசிந்த உண்மைகள் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தின. மார்க்சிஸ்ட் கட்சியின் விமர்சகர்களிடமிருந்து -அவர்களில் பெரும்பாலோர் இடதுசாரிச் சார்பாளர்கள் அல்லது பின்நவீனத்துவ அறிவுஜீவிகள்-கட்சியின் பழமைவாதக் கண்ணோட்டமே வரதராஜனைத் தற்கொலைக்குத் தூண்டியது எனவும் பாலியல் விவகாரங்களை அணுகுவதிலும் ஆண்-பெண் உறவு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்வதிலும் கட்சி நிலவுடைமை மதிப்பீடுகளையே பின்பற்றி வருவது தான் வரதராஜன் போன்ற மூத்த தலைவர்கள் வாழ்வின் இயல்பான நெருக்கடிகளில் ஒன்றான பாலியல் நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை முடிவை நோக்கித் தள்ளப்பட்டதற்குக் காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. ‘ஏன் தோழா இப்படிச் செய்தாய்? இன்னும் கொஞ்சம் பொறுமையைக் கடைப்பிடித்திருக்கலாமே’ என்கிறரீதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் கலாச்சாரக் காவலர் ச.தமிழ்ச் செல்வன் மறைந்த வரதராஜனின் ஆவியுடன் இணையத்தின் வழியாகக் கண்ணீர் மல்க உரையாடிக்கொண்டிருந்தார். கேள்வியெழுப்பியவர்களைப் பார்த்து இது தன் கட்சியின் சொந்த விஷயம் என ஆத்திரப்பட்டார் தமிழ்ச்செல்வன். வரதராஜன் காணாமல் போனது தொடர்பான செய்திகளை வெளியிட்ட தினமலர் அவர் ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொண்டவர் எனவும் மன அமைதிக்காக ஹரித்துவார், பத்ரிநாத், கேதார்நாத் போன்ற புண்ணியத்தலங்களுக்குப் போயிருக்கக்கூடும் எனவும் அவரைத் தேடிக் காவல் துறையினர் அங்கெல்லாம் போயிருப்பதாகவும் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டது. மார்க்சியத்தின் மீது மதிப்புக்கொண்டவன் என்ற ரீதியில் அந்தச் செய்தி உண்மையாக இருக்கக் கூடாதென விரும்பினேன். மார்க்சிஸ்ட் தலைவர்கள் அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவிப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் கண்ணுக்குத் தெரிந்து அப்படி எதுவும் நடக்கவில்லை. தோழர் வரதராஜன் தன் வீட்டினருக்கு எழுதிய கடிதமொன்றில் ‘மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்’ என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டியிருந்தார். மார்க்சிஸ்ட்கள் பகுத்தறிவுவாதிகளாகவும் நவீனத்துவக் கண் ணோட்டமுடையவர்களாகவும் இருக்க வேண்டும் என எதிர் பார்ப்பதுகூட ஒரு வகையான மூட நம்பிக்கைதான். குறளைப் போற்றும் தமிழ்த் தேசியவாதிகளே இந்தக் குறளை மேற்கோள் காட்ட தயங்கும் காலகட்டத்தில் புரட்சிகரமான ஒரு கோட்பாட்டைத் தன் வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக்கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தன் மரணசாசனமாக அதை மேற்கோள் காட்டியிருப்பது கட்சி பின்பற்றும் ஒழுக்க மதிப்பீடுகளுக்கான அடையாளம் எனக்கொள்வதில் தவறில்லை. ஆண்-பெண் உறவு சார்ந்த சிக்கல்கள், பாலியல் சுதந்திரம், குடும்ப அமைப்பு போன்ற விஷயங்களில் கட்சி நிலவுடமை மதிப்பீடுகளையே கொண்டுள்ளது. ‘நாம் வாழ்வது ஐரோப்பியச் சமூகத்தில் இல்லை, தமிழ்நாட்டில் தமிழர்களைத்தான் அணி திரட்ட வேண்டியிருக்கிறது. உடன்பாடு இல்லையென்றாலும் ஒரு தந்திரோபாயமாகவேனும் அவற்றைப் பின்பற்றியாக வேண்டும்’ என உ.ரா.வரதராஜன் தற்கொலை தொடர்பாக எழுதிய குறிப் பொன்றில் தெரிவித்திருக்கிறார் முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச் செல்வன். தான் நம்புகிற, போதிக்கிற ஒரு விஷயத்தை நடைமுறையில் பின்பற்ற முடியாத பலவீனத்தைக் காட்டிலும் தான் நம்பாத ஒரு விஷயத்தை நம்புவதாகச் சொல்லி ஏமாற்றும் தந்திரம் மோசமானது. ஒரு வகையில் இந்தத் தந்திரோபாயத்துக்குத்தான் உ.ரா.வரதராசன் பலியிடப்பட்டிருக்கிறார் அல்லவா? பொதுச் சமூகம் நடைமுறை சார்ந்து நிலவுடமை மதிப்பீடுகளுக்கெதிராகவும் அவற்றை மீறியும் இயங்கிக்கொண்டிருக்கும்போது மார்க்சிஸ்ட் கட்சி தந்திரோபாயம் என்ற போர்வையில் அவற்றைக் காப்பாற்ற முயல்கிறது. சமூக அமைப்பை அடியோடு மாற்றுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட்கள், சமூகத்தின் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு அதன் பழமைவாத நடைமுறைகளில் குறுக்கீடுகளை நிகழ்த்துவதை விட்டுவிட்டு மற்ற பூர்ஷ்வா அரசியல் கட்சிகளைப் போலத் தந்திரமாக அவற்றைப் பின்பற்றுவது எந்த வகையான புரட்சி எனத் தெரியவில்லை. கட்சிக்கு நவீன வாழ்வின் நெருக்கடிகள் சார்ந்தோ சமூக மாற்றத்தில் கட்சியின் பங்களிப்பு சார்ந்தோ எவ்விதமான புரிதலும் இல்லை என்றே இதை அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். கடுமையான அமைப்புவிதிகளைப் பின்பற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், ஊழியர்கள் தம் தனி அடையாளங்களைக் காப்பாற்றிக்கொள்வதற்கு ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவற்றின் முழுநேர ஊழியர்கள் கட்சியின் நிலைபாடுகளைப் பிரச்சாரம் செய்யும், கட்சி இடும் கட்டளைகளைச் சிரமேற்கொண்டு செயல்படுத்தும் பணிவான ஊழியர்களாக இருக்கும்வரைதான் கட்சியில் நீடித்திருக்க முடியும் என்பது எதார்த்தம். கட்சியின் முடிவுகளைக் கேள்விக்குட்படுத்துபவர்கள் கட்சிக்குள்ளேயே தனிமைப்படுத்தப்படுவதும் வெளியேற்றப்படுவதும் அன்றாட நடைமுறைகளாக இருப்பதை கம்யூனிஸ்ட் கட்சிகளில் செயல்பட்ட பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். விமர்சனம், சுயவிமர்சனம் போன்ற பதங்கள் வெறுமனே கட்சியின் கொள்கை விளக்க அறிக்கைகளில் இடம்பெற்றுவரும் அலங்காரச் சொற்களாக அர்த்தமிழந்துபோயிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். உண்மையில் கட்சி மக்களிடமிருந்து எதையுமே கற்றுக்கொள்ளவில்லை. மக்களின் வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகளில், சிந்தனைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களில் கட்சிக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்ச் சமூகத்தில் நடைபெற்றுவரும் விவாதங்களோடு கட்சிக்கு எந்த உறவுமில்லை. பெண்ணியவாதிகள், ஒருபாலுறவினர், அரவானிகள், பாலியல் தொழிலாளர் போன்ற மைய நீரோட்ட அமைப்புக்கு எதிரான செயல்பாடு கொண்டவர்களிடம் உறவை ஏற்படுத்திக்கொள்ளவோ அவர்களது போராட்டங்களில் பங்கெடுக்கவோ கட்சி அக்கறை காட்டியதற்குச் சான்றுகள் எதுவும் இல்லை. இந்த விஷயத்தில் திருக்குறளையும் கண்ணகியையும் போற்றும் தமிழகக் கட்சிகளின் தலைவர்களே பின்பற்றத் துணியாத ஒழுக்க நெறிகளை மார்க்சிஸ்ட் கட்சி தன் அணிகளின் மீது திணித்து வருகிறது. பாலியல் நெருக்கடிகள், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களை ஆராய்ந்த அறிவுலக, படைப்புச் செயல்பாடுகளைக்கூடக் கட்சியின் பண்பாட்டுப் பிரிவுகள் பொருட்படுத்தியதற்கு ஆதாரமில்லை. ஜானகிராமன், தாஸ்த்தயேவ்ஸ்கி போன்ற மாபெரும் எழுத்தாளர்களைக் கட்சிசார் மார்க்சிஸ்ட்கள் சீரழிந்துபோன முதலாளிய, ஏகாதிபத்தியச் சார்பாளர்கள் என விமர்சித்தார்கள். ஒரு கட்டத்தில் வரதராஜன் கொலைசெய்யப்பட்டதாக மக்கள் தொலைக்காட்சி ஒரு யூகத்தைக் கிளப்பியது. ஜூனியர் விகடன் இதழிலும் அப்படியொரு கட்டுரை வெளியிடப்பட்டது. வரதராஜன் தற்கொலை உருவாக்கியிருந்த பதற்றத்திலிருந்து விடுபடாத மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தைத் தாக்க, அதைப் பரபரப்புச் செய்தியாக்கியது மக்கள் தொலைக்காட்சி. இந்தத் தாக்குதல்களில் அதற்குக் குறைவான சேதமே ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மூன்று பெண்கள் உட்படத் தன் பணியாளர்கள் சிலர் ‘படுகாயமடைந்த’தாக ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது மக்கள் தொலைக்காட்சி. ஆனால் காரியத்தில் கண் கொண்ட பாமகவினர் இந்தப் பிரச்சாரத்தோடு திருப்தியடையாமல் மார்க்சிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கும் அந்த வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பலத்த சேதாரங்களை ஏற்படுத்தியிருந்தார்கள் பாமகவினர். மார்க்சிஸ்ட்கள் தம் ‘புரட்சிகர வன்முறை’யை இடம் பார்த்து நடத்தியிருக்க வேண்டும். இரு தரப்பிலும் சிலர் கைதுசெய்யப்பட்டதோடு வரதராஜன் கொலை பற்றிய விவாதங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. இப்போது எல்லாக் கண்களும் நித்தியானந்தாவை நோக்கி. தமிழ் அறிவுலகவாதிகளில் பலர் நித்தியானந்தா விவகாரம் குறித்து ஊடகங்களில் அல்லது வலைத்தளங்களில் கருத்துத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். சிலவற்றில் நித்தியானந்தாவின் பாலியல் தேவைகளுக்குப் பின்னால் உள்ள நியாயங்களைக் குறித்த உரையாடல்களும் ரஞ்சிதாவின் மீதான அனுதாபங்களும் இடம் பெற்றிருக்கின்றன. விவேகமான, ஓரளவு ஆரோக்கியமான இந்த விவாதங்களை வளர்த்தெடுத்துச் செல்வதற்கு ஊடகங்கள் விரும்பவில்லை. முன்தினம்வரை நித்தியானந்தாவின் கட்டுரைத் தொடரை வெளியிட்டுக்கொண்டிருந்த குமுதம் நிறுவனத்தின் ரிப்போர்ட்டர் உடனடியாகத் அவரது அத்யந்த சீடர்களில் ஒருவரான சாரு நிவேதிதாவை வைத்து ‘சரசம், சல்லாபம், சாமியார்...’ என ஒரு தொடரை ஆரம்பித்துவிட்டது (ஜாலி, ஜாலி, ஜாலி). ‘இரண்டாம் ஆட்ட’ நாயகனுக்கு இப்போது தன் கற்பை நிரூபித்தாக வேண்டிய நெருக்கடியை நித்தியானந்தா ஏற்படுத்தியிருக்கிறார். ஜூனியர் விகடனில் தன்னை ஒரு ‘வுமனைசர்’ எனப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாரு, தன் வலைத் தளத்தில் வுமனைசர் என்ற அந்தச் சாதாரண ஆங்கில வார்த்தைக்கு அர்த்தமே தெரியாது என எழுத வேண்டிய அளவுக்கு ஒழுக்கத்தின் கொடி பட்டொளி வீசிப் பறந்துகொண்டிருக்கிறது. ஒரு பக்கம் தன் மனைவியை நித்தியானந்தாவிடமிருந்து பத்திரமாக மீட்டாக வேண்டும். மற்றொருபுறம் தன் கற்பையும் காப்பாற்றிக்கொண்டு ரிப்போர்ட்டருக்குக் கட்டுரைத் தொடரும் எழுதியாக வேண்டும். சாரு பாவம். நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்குப் போய்வந்த நடிக நடிகையர்கள் இப்போது சந்தேகிக்கப்படுகிறார்கள். ஆனால் யாருக்குமே நித்தியானந்தா செய்த தவறு என்ன என்பதைச் சொல்ல முடியவில்லை. காவல் துறைக்கேகூட நித்தியானந்தாவின் மீது எந்தப் பிரிவுகளின் மீது வழக்குப் பதிவுசெய்வது என்பதில் தெளிவில்லை. யாரிட மிருந்தாவது கற்பழிப்பு அல்லது மோசடிப் புகார் பெற முடியுமா என யோசித்துக்கொண்டிருக்கிறது காவல் துறை. நித்தியானந்தா ரஞ்சிதாவோடு பாலியல் தொடர்பு வைத்துக்கொண்டது நித்தியானந்தாவின் தனிப்பட்ட விஷயம் என்றோ நித்தியானந்தாவின் அறையில் ரகசிய காமிராவை ஒளித்துவைத்து, அவரது அந்தரங்க நடவடிக்கைகளைப் படம்பிடித்ததும் அதை ஒளிபரப்பியதும் குற்றம் என்பதாகவோ ஒரு விவாதத்திற்கு இடமளிப்பதைக் குறித்து நம் ஊடகங்களால் ஒருபோதும் சிந்திக்க முடியாது. அவற்றின் வணிக நோக்கத்திற்கு அத்தகைய செயல்பாடு துணைநிற்கவும் முடியாது. பரபரப்பும் மர்மங்களும் நீடித்திருக்கிறவரைதான் சரக்கு விலை போகும் என்பதால் அவற்றைப் புதிதுபுதிதாக உருவாக்குகிறார்கள். ரகசியக் காமிராவில் பதிவான நித்தியானந்தா குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக்கொண்டிருக்கும் படத்தைப் பிரசுரித்து ‘நித்தியானந்தாவின் நிர்வாணப் படம்’ என விளம்பரப்படுத்திக் காசு பார்த்தன நம் புலனாய்வு இதழ்கள். நித்தியானந்தாவின் அறையில் அவரது நெற்றியில் கை வைத்துச் சோதித்துக்கொண்டிருக்கும் கோபிகா என்னும் ஆசிரமவாசியான ஒரு பெண்ணின் படத்தைப் பிரசுரித்து ‘பெண் சாமியாருடன் நித்தியானந்தா சல்லாபம்’ என ஒரு செய்திக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். இதுவரை ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் அவர் ரஞ்சிதா என்ற ஒரு பெண்ணோடு தன் அறையில் நெருக்கமாக இருந்திருக்கிறார் என்பதற்கான ஆதாரம் மட்டுமே. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது இதில் முக்கியமான விஷயம். தாம் கட்டமைக்க விரும்பும் பரபரப்பு மதிப்பு இதில் இல்லை என்பதால் நித்தியானந்தாவை ஒரு பெண் பித்தனாக, காமக்கொடூரனாகச் சித்தரிப்பதற்கான புனைவுகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன புலனாய்வு இதழ்கள். நித்தியானந்தரின் பாலியல் மோசடிகளில் ‘சில பெரிய புள்ளி’களுக்குத் தொடர்பு இருப்பதாகச் சொல்லும் இவ்விதழ்கள் ஒருபோதும் அந்தப் பெரிய புள்ளிகள் யார், அவர்கள் நித்தியானந்தாவோடு சேர்ந்து எத்தகைய மோசடிகளில் ஈடுபட்டார்கள் என்பதைச் சொல்லப் போவதில்லை. இதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன. நித்தியானந்தா வரதராஜனைப் போல் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடவில்லை. திருக்குறளையும் மேற்கோள் காட்டவில்லை. வாரணாசியிலிருந்து ஊடகங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நித்தியானந்தா தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டபூர்வமாக எதிர்கொள்ளப் போவதாகச் சொல்லியிருக்கிறார். முழுக்க நனைந்துவிட்ட பிறகு முக்காட்டைக் கழற்றிப்போடுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அவரது ஆன்மிக வாழ்வின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள போதிலும் ஒரு சாதாரண மனிதனாக வாழ்வின் சராசரி இனபங்களைத் துய்ப்பதற்கு அவருக்கு எந்தத் தடையுமில்லை. அவரால் கிழித் தெறியப்பட்டது பிடாதி ஆசிரமத்தின் ஒழுக்கக்கொடிதான், ஆன்மிகக்கொடி அல்ல. இதன் மூலம் மக்கள் ஆன்மிகவாதிகளின் மீதான நம்பிக்கைகளைக் கைவிட்டு விடுவார்கள் என நம்புவதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுச் சிறையிலிருக்கும் பிரேமானந்தா கைதிகளுக்கு ஆன்மிகப் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறாராம். ஆன்மிக வெற்றிடம் பயங்கரமானது. மக்கள் யாராவது ஒரு சாமியாரைக் கொண்டு அதை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். மார்க்சிஸ்ட் கட்சியுங்கூட வரதராஜன் தற்கொலை தொடர்பாக உருவான விமர்சனங்களிலிருந்து மீண்டு வந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கட்சி பழமைவாதத்திலிருந்து மீண்டுவந்து தன்னை நவீனப்படுத்திக்கொள்வதற்கும் நவீன வாழ்வின் நெருக்கடிகளை ஒரு முன்னணிப்படையாய் நின்று எதிர்கொள்வதற்குமான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முன்வராதது துரதிருஷ்டவசமானது. |
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக